நிறுவனங்கள்

அருளகம் எனும் அன்பு இல்லம், கருணை நிலையம் அநாதரவான குழந்தைகளின் வாழிடமாக இன்றைக்கு 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அருளகத்தை ஆரம்பித்த போது 20 பிள்ளைகள் இருந்தார்கள். அரசாங்க அதிபர், கிராம சேவையாளர், நீதிபதிகள் உதவி அரசாங்க அதிபர், வர்த்தகர்கள், நலன்விரும்பிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், பரோபகாரிகள், கல்விமான்கள், ஏனைய ஆலய அறங்காவலர்கள், வெளிநாட்டு நன்கொடையாளர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் உறவுகள் செய்த, செய்து வரும், செய்ய எண்ணும் பேருதவிகள் எங்கள் அனைவரதும் உள்ளத்தைப் பெருநிறைவு செய்வதாகிறது.

எல்லாவிதமான பிற அபிவிருத்திகளையும் விட குழந்தைகளின் கல்வியிலும், ஒழுக்கத்திலுமே அருளக நிர்வாகம் பெருங்கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. “அருளக மாணவ, மாணவிகளது உயர் கல்வி வளர்ச்சியடைந்து அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்று வரவேண்டுமென்ற சீரிய உரிய சிரத்தையுடன் நாம் செயற்படுத்துகிறோம்” என்று திருக்கோயிலின் தலைவர் திரு. மு.சபாநாதன் தமது ஆசிச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

அறங்காவலரும் கௌரவ செயலாளருமான திரு.ஆ.நவரெத்தினராசா அவர்களது வாழ்த்துச் செய்தியில்,

“அருளகம் என்பது எனது எண்ணத்தில் இறையருளின் உந்துதலால் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயிலின் சூழலில் 1996 முதல் கருக் கொண்டது. அருளகத்தின் அத்திவாரம் இடப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை அதன் வளர்ச்சி, அபிவிருத்தி, உயர்ச்சி என்பனவற்றில் எமது அறங்காவலர் சபையின் ஒரு மனதுடன் ஐக்கியமாக ஒற்றுமையாகச் செயற்பட்டுச் சாதனைகள் பல புரியும் இல்லமாக இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்நிலை எனக்கு மட்டற்ற மனநிறைவைத் தருகிறது.

திருவருளும், குருவருளும் துணைநின்றமையால், எடுத்த முயற்சிகள் கருதிய சிந்தனைகள் எண்ணிய நலத் திட்டங்கள் அனைத்தும் ஈடேறித்தமிழ் மண்ணில் கவனிப்பாரற்றுக் கிடந்த சிறார்களுக்கு அபயமளிக்கும் – அடைக்கலமளிக்கும் சாந்தி நிலையமாக அருளகம் உள்ளது. கலை, கல்வி, பக்தி, பண்பாடு, ஆசாரம், நுண்மதி, பரோபகாரம், தன்னடக்கம், விருந்தோம்பல், ஆசிரியத்துவம், ஒழுக்கம், வழிபாடு என்பன நமது அருளக இல்லத்தின் இலட்சியக் கோட்பாடுகளாகும்.

சிவாலயத்துடன் இணைந்த அருளகம் என்பதால் பிள்ளைகளுக்குச் சைவப் பண்பாடு உணர்த்தப்படுவதற்குப் பெருவாய்ப்பாகிற்று. சிவதீட்ஷை, உருத்திராக்கம், காவிவஸ்திரம் என்பன அருளகத்திலே துலக்கமாகப் பயன்படுத்தப்பட்டன. திருமுறைகளும், சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. கல்வி சம்பந்தமான விரிவுரைகள் பாடப் போதனைகள் இருபாலார்க்கும் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களதும் சிரேஷ்ட விரிவுரையாளர்களதும், பேராசிரியர்கள், கலாநிதிகளதும் உதவிகள் கிடைக்கப்பட்டு சிறந்த முறையிலே நிர்மாணிக்கப்பட்டது.

சேவையுணர்ச்சியும், தியாகமும், அர்ப்பணிப்பும் கொண்ட ஊழியர்கள், அதிகாரிகள்அருளகத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் சாதனைகட்டும் கைகொடுப்பவர்களாயினர். புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் எமக்கு உதவிக்கரம் நீட்டினர். நேரில் வந்து பார்வையிட்டு எமக்கு ஆறுதல் கூறினர். முதுகைத் தட்டி எம் பணிக்குத் தோள்கொடுத்தனர். அந்த வகையில் அளப்பரிய பங்காளர்களாக லண்டன் மாநகர ஈலிங கனகதுர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினரை என்றும் மறவா மனத்துடன் நினைவு கூருகின்றோம்.

இலண்டன் மாநகரில் குருத்துவப் பணியில் சேவையாற்றிவரும் எனது அன்பிற்குப் பாத்திரமான வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ வசந்தக்குருக்கள் மூலம் அறிமுகமான கற்பக விநாயகர் ஆலய ஆதீன கர்த்தா கோபால் ஜயாவின் பரோபகார சேவையையும் நினைவு கூர்ந்து வாழ்த்தி நிற்கின்றேன். இது போன்ற கனடா வாழ் நல் உறவுகள் அவுஸ்ரேலியா, சுவிஸ், ஜேர்மன், பாரிஸ், நோர்வே, சிங்கப்பூர், ஐக்கியஅமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் உறவுகளை நினைவு கூர்ந்து அவர்கள் தொடர்ந்தும் எமக்கு ஆதரவு தரவேண்டும் எனவும் பணிவுடன் வேண்டி நிற்கின்றேன். அருளகம் வளர்ச்சி பெற்றதும், உயர்ச்சியடைந்ததும் எண்ணத்தின் அருள் உயர்ச்சியால் என்பதனை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

இதற்குப் பேருதவி புரிந்த சாதனம் சிவபூஜையாகும். சிவபூஜை என்பது வேண்டியவற்றை விரும்புவனவற்றைச் சாதனைக்கு இடும் நடைமுறையாகும். நித்திய கருமமாகும். நமது சமயமும் பண்பாடும் பின்பற்றுதலாகிய நெறிமுறைகளுடன் நிரம்பியது. என்றும் நித்தியமானது. அவற்றின் பெருநலம் அருளகத்தினூடே யான் கண்டுகொண்ட நடைமுறைப் பேருண்மை. சிவாலயமோ, அருளகமோ, ஆண்கள் பெண்கள் இல்லமோ, முதியோர் இல்லமோ அனைத்தும் எம் முயற்சிக்கு அப்பால் ஒரு பேரருள் வழிகாட்டி ஈடேற்றியது என்பது பணிவான கருத்து.

“ஏழைகளுக்கு எழுத்தறிவிப்பது புண்ணியத்திலும் புண்ணியம் அருளகத்தில் கண்ட நிதர்சனம் இன்று பல்கலைக்கழகப் பிரவேசம் முதல் இராமநாதன் நுண்கலைப் பீடம், கல்வியற் கல்லூரி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில், அருளகத்தில் பயின்ற, வாழ்ந்த, இருந்த மாணவர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்” என்று எழுதியுள்ளார்.

வவுனியா மேல்நீதிமன்ற ஆணையாளர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் அவர்கள் கூறுவது, “இல்லச் சிறுவர்கள் கோவில் மணி ஓசையைத் தினமும் காலையும் மாலையும் கேட்கும் பேறு பெற்றுள்ளனர். ஓசையே பிரணவ நாதம். அது சங்கொலிபோல் யோகநிலையிலிருக்கும் போது கேட்கும். அவ்வொலி கேட்கப்படுமாயின் சிவனைக் காணலாம் என்பது சிவ யோகியர் கருத்து. ‘ஓசையானுணர்வார்க்கு உணர்வரியவன்’ என விளக்குதல் காண்க.” (2011 : ஒii)

சாவகச்சேரி மாவட்ட நீதிபதி உயர்திரு. மா. கணேசராஜா அவர்கள் தமது அனுபவத்தைக் கூறியபோது, “ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் இந்து சிறுவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்து எதிர்காலத்தில் சிறந்த பிரஜையாக உருவாக அவர்களுக்கு வேண்டிய கல்வியைக் கற்பித்து சிறப்புற இயங்கி வருவது நான் கண்கூடாகக் கண்ட ஒன்றாகும். ‘ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும்’ என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க ஒழுக்கத்தையும் கல்வியையும் உடல் உள நல ஆரோக்கியத்திற்காக விளையாட்டுப் பயிற்சிகளையும் கற்பித்து உயர்நிலை அடைய உதவும் இல்லமாக இருப்பது போற்றுவதற்குரியதாகும். நான் வவுனியா மாவட்ட நீதிபதியாக இருந்த போது நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகளுடன் நிலத்தில் அமர்ந்து உணவு உண்டு பின் அவர்களுடைய இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நான் பரிசில்களை வழங்கிய போது அவர்களின் ஆர்வத்தையும் உடல் உள மேம்பாட்டையும் கண்டு வியப்படைந்துள்ளேன்.

கண்டிப்பும், கட்டுப்பாடும் இருந்த போதும் ‘அன்பே சிவம்’ என்று அனைத்துச் சிறுவர்களையும் அன்புடன் அரவணைத்துச் சிவாலய நிகழ்வுகளிலும் பூசைகளிலும் அவர்களை ஆகம ஒழுங்குகளுக்கு அமைவாக சரியை கிரியைகளைச் செய்வித்து இறைவனின் அருளாசியைச் சிறுவர்களுக்குக் கிடைக்கச் செய்து அவர்களின் உயர்வுக்கு உரமூட்டுவதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையின் பிறந்தநாள் விழாவிலும் எம் சொந்த வீட்டுப் பிள்ளைகளின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதை விட விருந்தினர்களுடன் ஆடிப்பாடிக் கொண்டாடுகின்ற போது அதில் நானும் ஒருவனாகப் பங்கு பற்றியதை இன்றும் நான் நினைவு கூருகின்றேன்.

நான் இல்லம் வரும் போதெல்லாம் தம்மில் ஒருவராக என்னை நேசித்து வரவேற்று உபசரித்து குறைநிறைகளைக் கூறி, தீர்வுகளைப் பெற்றதையும் குழந்தைகளின் இனிமையான ஆடல் பாடல்களை நவராத்திரி விழாவிலும் சாதாரண நாட்களிலும் கண்டும் கேட்டும் உளம் மகிழ்ந்தது மறக்க முடியாத ஒன்றாகும். இல்ல நிர்வாகிகளினதும் குழந்தைகளினதும் அன்பு என்னை அடிக்கடி இல்லம் நாடி வந்து குறைகளைத் தீர்க்கவேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்தது. கல்வியில் எப்படியும் எமது பிள்ளைகள் உயர் நிலையை அடைய வேண்டும். அதற்குத் தயார்ப்படுத்த வேண்டும், கணினி பழக வேண்டும், பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என நிர்வாகிகள் திடமாகவும், உறுதியாகவும் இருப்பதை அவர்களின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் மூலம் என்னால் உணர முடிந்தது. வவுனியாவை விட்டு வர மனம் வராமல் இருந்ததற்கு இந்த இல்லமும் ஒரு காரணமென்றால் அது மிகையாகாது.” (2011: ஒiii ஒii)

நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் தேவஸ்;தானத்தின் மரபுவழி அறங்காவலரும், சப்பிரமுவப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையின் முன்னாட் தலைவரும், மகாவித்துவான், அருட்கலைமாமணி, முத்தமிழ் வித்தகர், சித்தாந்த பண்டிதர், வாகீசகலாநிதி, சொற்பேராழி, பிரசங்கப்பேராழி, நவரஸக்கலைஞானி எனும் சிறப்புப் பட்டங்களைக் கொண்ட பேராசிரியர் டாக்டர் கனகசபாபதி நாகேஸ்வரன், அவர்கள் அருளகம் மலருக்கு வழங்கிய வாழ்த்திலே,

“அருளகம் புனிதமானது. புண்ணியசீலர்களால் உருவாக்கப்பட்டது. பிள்ளைகளின் வாழ்விடம். குழந்தைகளின் மழலையும், குறும்பும் சங்கமித்து இதமான சப்தம் செய்யும் குவலயம். தனிமை எண்ணம் நீங்கிக் கூட்டமாகவும், திண்ணிய நெஞ்சுடனும், திடசித்தத்துடனும் மாணவர்களை வாழ வைக்கும் கலங்கரை விளக்கம். கலையும், கல்வியும், சைவமும், தமிழும் பண்பாடும் ஒழுக்கமும் பண்ணும் பதமும் உன்னத சாதனைகளும் புரியும் கலைக்கூடம், கல்விச் சாலை, அன்பு, அரவணைப்பு, பக்தி, சீலம், செந்தண்மை, பரோபகாரம், கூட்டுவாழ்வு வாழும் சமூக இயல்பு என்பன அருளகத்தின் அற்புதம். சிவ வழிபாடும், சக்தி வழிபாடும், நாவலர் காட்டிய செம்மைநலத் திட்டங்களும், சமூக சேவைகளும் குடிகொள்ள நிர்வாகிகளால், தர்மகர்த்தாக்களால் அருளகம் நிர்வகிக்கப்படுகிறது. உலகளாவிய அன்பும் அரவணைப்பும் அருளகத்தின் வளர்சிக்கு உதவுகின்றன. வள்ளல்களின் பரோபகாரம், அதிகாரிகளின் ஒத்துழைப்பு, அரசாங்கத்தின் அனுசரணை, அரச அதிபரின் பேருதவி, நீதிபதிகளின் ஆலோசனை, கல்வியாளார்களின் உதவிகள் நிரம்பப் பெற்ற நிறுவனம் ‘அருளகம்’ என்பது நடைமுறையில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நாம் அனுபவிக்கும் நிலைமையாகும். ‘உள்ளத்தால் உயர்ந்த’ உத்தம சீலர்களின் செயலுந்தல். பிள்ளைகளின் நல்வாழ்வை ஒளிமயமாக்கியுள்ளமை கண்டு பேருவகை கொள்கிறேன்.” (2011 ஒஎ)

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராயிருந்த திருமதி. சாந்தி நாவுக்கரசன் அவர்கள் எழுதுவது,

“இந்தச் சிறுவர் இல்லத்தின் செயலாளராக இருந்து அனைத்துக் குழந்தைகள், சிறுவர்களுக்கும் தந்தையாய் – வழிகாட்டியாய் பணிபுரியும் திரு. ஆ. நவரெத்தினராசா அவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் உரியதாகும். இத்தகைய நல்லெண்ணம் கொண்டோர் இந்து சமூகத்திற்கு இன்று மிகவும் அவசியமாக உள்ளனர். அன்னாருக்கு அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். இத்தகைய அரிய பணிகளை ஆற்றிவரும் அருளகத்தின் ஏனைய நிர்வாகத்தினரையும் அங்கு சிறப்புடன் பணியாற்றும் உத்தியோகத்தர்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்” (2011 : ஒஎi)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சீனித்தம்பி யோகேஸ்வரன் விபரிப்பவை வருமாறு,

ஈழமணித் திருநாட்டின் வடக்கே இயற்கை எழிலுடன் விளங்கும் வவுனியா என்னும் நன்நகரில் இயங்கையாலும் செயற்கையாலும் ஏன் யுத்தச் சூழலாலும் தமது பெற்றோரை இழந்து ஆதரவற்றுத் தவித்துக்கொண்டிருந்த சிறுவர்களுக்கும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் சமய சமூக ஆன்மீகக் கூடம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அருளகம் ஆகும். எமது தர்மம் “சனாதன தர்மம்” ஆகும். இதன் சிறப்பைச் செயலில் காட்டி எங்கள் சமயத்தினைப் பெருமைப்படுத்திக் கொண்டிருப்பது இவ் அருளகமும் என்றால் மிகையாகாது. பராமரிப்பற்ற கைக்குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரேயொரு தர்மஸ்தாபனம் இவ் அருளகம் என்று கூறலாம். எல்லோரும் அரச தொழிலும், அதன் மூலம் ஊதியமும் என்ற நோக்கில் செயற்படும் இக் காலத்தில் தன்னலமற்று எமது மக்களின் துயர்;துடைக்கத் தங்களை அர்ப்பணித்துப் பல துன்பங்களை அனுபவித்து  கௌரவ பிச்சை ஏந்திச் சேவை செய்யும் பெருந் தொண்டர்களை திரு. ஆ.நவரெத்தினராசா, திரு.மு.சபாநாதன் உட்பட நிர்வகிப்புப் பெருமக்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

சேவை செய்வதும் இறையருளே! இச் சேவையாளரின் மனம் என்றும் எந்த அனர்த்தத்தாலும் தளராது இருக்கவும், இவர்களின் இச் சேவைக்கு உறுதுணை வழங்க நல் மனம் கொண்ட பெரு மக்கள் தாங்களாக முன்வரவும், இங்கு வளரும் பிள்ளைகள் கல்வி உட்படச் சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு தங்களது மனக்குறை மறந்து மகிழ்வுடன் வாழவும் இவ் அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் பணி மேலோங்கித் துன்புறும் எமது மக்களுக்கு இன்பம் வழங்கும் விருட்சமாகத் திகழவும், இறைவனைப் பிரார்த்தித்து எனது மனப்பூர்வமான நல்லாசியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.” (2011 : ஒஎii)

அகவை பத்தில் அருளகம் எனும் சிறப்பு மலருக்கு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோயிலின் அறங்காவலர்சபைத் தலைவர் திரு. ஆ.தியாகராசா அவர்களின் வாழ்த்து வருமாறு,

“அருளகத்திற்கு அகவை பத்து என்பதை அறிந்து அகம் மகிழும் அன்பு உள்ளங்களில் அடியேனும் ஒருவன். அல்லல்பட்டு, அணைப்பார் எவருமின்றி அவதியுற்று நின்ற மழலைகளை அணைத்து ஆதரவு கொடுத்த  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கோவிலின் அறங்காவலர்களின் அளப்பரிய சேவையைக் கண்டு அன்றும் இன்றும் அகிலம் பேசா நாளும் இல்லை நாவும் இல்லை என்றால் மிகையாகாது. சேவை எங்கே தேவை என்று செயலாற்றும் அறநிலையங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல் எவ்விதத் தளர்வுமின்றி அன்றுமுதல் இன்றுவரை தன் பணியில் தனிப்பெரும் சிறப்புடன் பணியாற்றுவது அருளகமாகும். இப்பணியில் அறப்பணியாற்றும் தொண்டர்களுக்கும் திருக்கோவில் அறங்காவலர்கட்கும் எம்பெருமானின் திருவருள் என்றும் கிடைக்க வேண்டும். இங்கு வாழ்ந்து, வளர்ந்து வருகின்ற அன்புக் குழந்தைகளுக்கு எமது ஆசியும் அன்பும் உரித்தாக வேண்டும் என அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்”. என்றுள்ளது. (2011 : ஒiஒ)

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ‘மக்கள் சேவை மாமணி’ திரு. நா.சேனாதிராசா JP அவர்கள் கூறும் கருத்துக்கள் வருமாறு,

 

“கடந்த போர்க் காலத்தில் இவ்வாறான சிறுவர் இல்லம் இல்லாது போயிருந்தால் நூற்றுக்கணக்கான எமது சமயம் சார்ந்த பிள்ளைகளை வேறு சமயத்தவர்கள் தட்டிச் சென்று மதம் மாற்றியிருப்பார்கள். இடம் பெயர்ந்து மக்கள் மெனிக்பாம் முகாமிற்கு அகதிகளாக வந்த போது பெரியார் நவரட்ணம் ஐயா அவர்கள் முகாமிற்குச் சென்று ஆதரவற்ற பிள்ளைகளையும் பாரம் எடுப்பதற்குத் தயாராக இருந்த போதும் வேறு சமயத் தலைவர்கள் தடையாக இருந்ததை நான் அறிவேன். முகாமிற்கு வந்த பிள்ளைகளில் பெரும்பான்மையானோர் சைவப் பிள்ளைகளே! இதன் மூலம் பெரிய சமய மாற்றத்திற்கு முயற்சி செய்தனர். இதனால் சைவப் பிள்ளைகள் பலர் வேறு சமய நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்டு சமய மாற்றம் மட்டுமல்ல மொழிமாற்றமும் செய்யப்பட்டமை பலருக்குத் தெரியாது”. (2011 : ஒஒii)

திரு. இ. கிருபாமூர்த்தி அவர்கள் எழுதுவதாவது, “அருளகத்தின் காவலர், பாதுகாவலர், அறங்காவலர், சபைச் செயலாளர், சைவப் பெரியார், இறைபணியாளர், திரு. ஆ.நவரெத்தினராசா ஐயா அவர்களது தொண்டும் அருளகத்தின்பால் அவர் ஆற்றி வரும் அருட்பணியும் சைவ அடியார்களின் சேவை வரலாற்றிலும், இலங்கைத்தமிழ் மக்களது எண்ணங்களில் தமிழ் மண்ணில் யாழ். தெல்லிப்பழை துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டிக்கு அடுத்ததாகப் பதிவு பெறும்” என்கிறார்.(2011 : ஒஒiii)

வவுனியா பொலிஸ் பிரிவு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அலுவலக நன்னடத்தை உத்தியோகத்தர் திரு. த. துசியந்தன் அவர்கள் கூறுவதாவது,

“இச் சிறுவர் இல்லமானது ஆரம்ப காலங்களில் வவுனியா மாவட்டத்தில் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலும் பெற்றோரை இழந்து அல்லது பிரிந்து மற்றும் போதிய பராமரிப்பினை வழங்கமுடியாதிருந்த சிறுவர்களுக்குப் பராமரிப்பும், பாதுகாப்பும் அளித்து அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கும் பெரிதும் உதவியளித்து வந்துள்ளது. அண்மையில் வன்னிப் பிரதேசத்தில் இருந்து மக்கள் பாரிய இடப்பெயர்வுக்கு முகம் கொடுத்திருந்த வேளையில் பல சிறுவர்கள் தமது குடும்ப உறவுகளை இழந்து அல்லது பிரிந்த நிலையில் பாதுகாப்பும் பராமரிப்பும் அற்ற நிலையில் இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் பரிதவித்த நிலையில் அவர்களை நீதிமன்றின் ஊடாக வெளியில் தத்தெடுத்து தங்கவைத்து போதிய பராமரிப்பை வழங்குவதற்கு அருளக நிர்வாகத்தினரே எமக்குப் பூரண ஒத்துழைப்பையும், பங்களிப்பினையும் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.” (2011 : ஒஒஎi)

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவு நன்னடத்தை உத்தியோகத்தர் இ. கோகுலதாஸ் (டீ ஊழஅ (ர்ழஅ)இP.பு.னுip.in. நுனு) அவர்களது பார்வையில், “அருளகம்” அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 2011 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 02ஆம் திகதி உருவாக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 11ஆம் திகதி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை வறுமை காரணமாக தாய்மார் வெளிநாடு சென்றதன் காரணமாக உடல் மற்றும் உள மற்றும் பாலியல் மற்றும் சமூக ரீதியான பல வடிவங்களிலும் பாதிக்கப்பட்ட – பாதிப்பிற்குள்ளாகி வருகின்ற வேறுபட்ட வயதுப் பிரிவினரைச் சேர்ந்த சிறார்களின் தேவையறிந்து சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. அருளகத்தின் சமூகப்பணி என்பது சிறார்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் வழங்குதல், இந்து கலாச்சார விழுமியங்களைக் கற்றுக் கொடுத்தல் மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துடன் நாட்டின் நற் பிரஜைகளாக அவர்களை ஆக்குதல் என்ற வகையில் பரந்து விரிந்து பெரு விருட்சமாகச் செல்வதனை அவதானிக்க முடிகிறது.” (2011 : ஒஒஎii)

கரவெட்டிப் பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் அருளக இல்லத்தோடு தமக்கிருந்த தொடர்பைப் பற்றி விபரிக்கையில்,

“நான் வவுனியா பிரதேச செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த போது ‘அருளகம்’ என்ற இச் சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செயலாளர் திரு. ஆ.நவரெத்தினராசா அவர்களும் நானும் தரணிக்குளம் கிராமத்திற்குச் சென்று இவ்வில்லத்தில் இணைப்பதற்கான முதலாவது சிறுவனை அழைத்து வந்தமை இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது. இப் பத்து ஆண்டுகளில் இச் சிறுவர் இல்லம் ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி ஆதரவற்றிருக்கும் சிறுவர்களுக்கு அபயக்கரமளித்து அர்ப்பணிப்பு மிக்க சேவையை ஆற்றிவருவது பாராட்டத்தக்கதாகும். கடந்த காலங்களில் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான சிறார்களுக்குத் தஞ்சமளித்து அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தியிருப்பதுடன் அச்சிறார்களின் எதிர்கால நலனில் மிகுந்த அக்கறையுடனும் பற்றுணர்வுடனும் செயற்றிறன் மிக்க சமூகப் பணிகளை அருளகம் ஆற்றி வருவது போற்றுதற்குரியதாகும்.

இவ்வாலயத்தின் மூலம் முன்னெடுத்து வருகின்ற சமூகப் பணிகள், அறப்பணிகள் என்பன முன்னுதாரணமாகவும் பயனுறுதியுள்ளனவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அருளகம் தனது சேவையினை மேன்மேலும் விரிவடையச் செய்து ஆதரவற்றிருக்கும் சிறுவர்களின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களை இச்சமூகத்தில் கல்வியறிவும், நற்பண்புகளும் உள்ளவர்களாகவும் சமூக சிந்தனை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன் இவ்வரிய பணியில் தங்களைச் சிறப்பான முறையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களுக்கும், அருளகத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் இச்சிறுவர் இல்லம் மென்மேலும் வளர்ச்சியடைந்து தனது சேவைகளை விரிவுபடுத்தி மக்களின் வாழ்வில் குடியேற்ற வேண்டும் எனவும் இதற்கான மனோபலத்தினையும், பணபலத்தையும் வழங்கி எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரப் பெருமான் அருள் பாலிக்க வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.” (2011 : ஒஒஎiii)

வவுனியா பிரதேச செயலாளர் திரு. அ. சிவபாலசுந்தரன் கூறுவது,

“வவுனியாவின் பெருங்கோயில் என அழைக்கப்படக் கூடிய கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரரி சமேத அகிலாண்டேஸவரர் ஆலயம் ஆலயப் பணியோடு சமுதாயத்திற்கென ஆற்றிவரும் அறப்பணிகள் ஏனைய இந்து ஆலயங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை. சிறு கைக்குழந்தை முதற்கொண்டு இவ்வில்லத்தில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவது நாம் பிரதியட்சமாகக் கண்டுணர்ந்த உண்மையாகும். இத்தகைய பெரும்பணியை ஆற்றிவரும் அதனோடு தொடர்புடைய அனைவருக்கும் இம்மையிலேயே மறுமையின் பயனை அடையும் பெரும் பேறு கிட்டும் என்பதில் ஐயமில்லை. இவர் பணி சிறக்க எமதுள்ளத்து நல்வாழ்த்துக்களோடு இறையருளும் என்றும் கிட்டுவதாகும்.” (2011 : ஒஒiஒ)

வவுனியா வடக்கின் பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமனின் கருத்துக்கள் வருமாறு, “மனிதனை மண்ணில் நல்ல வண்ணம் வழிகாட்டும் சைவ சமயம். தான் மட்டும் வாழாது எல்லோரும் வாலவேண்டும் என நினைத்து வாழ வழிகாட்டும் சமயமும் சைவசமயமே ஆகும். கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் தேவஸ்தானத்தால் நடாத்தப்பட்டு வரும் சிறுவர் காப்பகம் 10 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதென்பது இங்குள்ள சிறார்கள் அன்பு, கருணை, தருமம், சகோதரத்துவம், பெரியோர்க்கு கீழ்ப்படிதல், உண்மைபேசுதல், உயிர்களிற்கு இரங்குதல், அவற்றைப் பாதுகாத்தல், பெற்றோருடனும் இணங்கி வாழ்தல் ஆகிய நற்சிந்தனைகளுடன் பத்து வருடங்கள் வளர்க்கப்பட்டுள்ளார்கள். என்பதனையே குறிக்கின்றது. தற்காலத்தில் ஆடம்பரத்திற்கு அதிமுக்கியத்துவம் வழங்கப்பட்டு, இறை சிந்தனை என்பது பணம் சேர்த்துப் பெற்றுக் கொள்ளும் கடைச்சரக்கு என்பது போல சில இந்துக்களால் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் தேவஸ்தானம் அறநெறிகளையும், அன்புநெறிகளையும், நற்சிந்தனைகளையும் போதித்து நல்லதொரு சமுதாய வளர்ச்சிக்கு வித்திடக்கூடியதாக ஆதரவற்ற சிறுவர்களுக்கான சிறுவர் காப்பகத்தை நடாத்தி வருவது சைவ சமயத்தவர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடியதும் ஏனைய ஆலய நிர்வாகத்தினரையும் இது போன்ற நற்கருமங்கள் ஊடாக இறைவனை அடையலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.” (2011 : ஒஒஒ)

 

1.1         அருளகத்தின் கல்விசார் செயற்பாடுகள்

19.11.2009 இல் கல்வி நிலையத்திற்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ளுயஎந வாந ஊhடைனசநn அமைப்பினால் கொட்டகை அமைக்கப்பட்டு 1 – 11 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. பாடசாலைக்குத் தேவையான மேசை, வாங்கு, கரும்பலகை போன்றவற்றைத் தலைவர் தனது செலவில் செய்து நிவர்த்தி செய்தார். கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டது. எமது மாணவர்களுக்கு கிழமை நாட்களில் பிற்பகல் 3.00 தொடக்கம் பி.ப 5.00 மணி வரை பிரதான ஐந்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருவதுடன் விளையாட்டிற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் பாடவிதான செயற்பாட்டின் மூலமாக இணைப்பாட விதான செயற்பாட்டையும் விருத்தி செய்யும் முகமாக பெண் பிள்ளைகளுக்கு நடன வகுப்பும் ஆண்பிள்ளைகளுக்கு மிருதங்க வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சகிதம் எழுந்தருளியிருக்கும் சிவபிரானைப் பிரார்த்தித்து வழிபட்டு சொற்பொழிவும் நிகழ்த்துவது வழக்கம். பிள்ளைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டுவதற்காக ஞாயிற்றுக் கிழமைகளில் அறக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்கள மொழியினை விருத்தி செய்யும் முகமாக வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு நவீன தொழிநுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் கணினி கல்வியும் புகட்டப்பபட்டு வருகின்றது. இல்ல மெய்வல்லுனர் போட்டியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக மாவட்ட நீதிபதி கௌரவ மாணிக்கவாசகர் கணேசராசா கலந்து கொண்டு சிறப்பித்தார். (2010 இல்) நடைபெற்ற கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சைக்கு பத்து மாணவர்கள் தோற்றி ஏழு மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் பாட அறிவை விருத்தி செய்வதன்; நோக்குடன் வருடாந்தம் கல்விச் சுற்றுலா செல்வது வழக்கம். 2011 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவிற்கு தோற்றுவித்து நிலையத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். (முன்னைநாள் கல்வி நிலைய அதிபர் திரு.ந..செல்வரத்தினம்)

அருளகச் சிறுவர்களுக்காக இல்ல மெய்வல்லுநர்களைத் தெரிவு செய்வதற்காக,

  1. தொல்காப்பியர் இல்லம்.
  2. கைலாசபதி இல்லம்.
  3. கணபதிப்பிள்ளை இல்லம்.
  4. வித்தியானந்தன் இல்லம் என நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டன.

‘மாணவர் மன்றம்’ அமைத்து பேச்சு, நாடகம், விவாதம், பொது அறிவு, வினாடிவின எனப்பல நிகழ்வுகளில் போட்டி வைத்து பரிசில்கள் வழங்கப்பட்டன. குழுக்களுக்கிடையில் சஞ்சிகை வெளியிடப்பட்டது. வெள்ளிக்கிழமைகள் தோறும் ஆலயத்தில் பிரசங்கம் செய்தல், குருபூசை தினம் கொண்டாடுதல், பரீட்சை வைத்தல், வீட்டுத் தோட்டம் அமைத்தல், அறநெறி வகுப்புகளுக்குச் செல்லுதல், ஆலயச் சரியைத் தொண்டில் ஈடுபடல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். இந்த முயற்சியின் விளைவாக பாடசாலையில் இடம்பெற்ற போட்டிகளில் பாடசாலைமட்டம், வலயமட்டம், கோட்டமட்டம், மாவட்டமட்டம், தேசியமட்டம் எனப் பல படிகளைத் தாண்டிச் சாதனை பதித்து அருளகத் தாய்க்குப் பாரெங்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள். இவ்வாறாக எல்லாத் திக்குகளிலும் சிறார்கள் புகழ்பெற வேண்டும் – உயர வேண்டும் என்பது அருளகத்திற்காக உழைகை;கும் அனைத்து உள்ளங்களினதும் முயற்சியாகும். எனவே, சிறார்களின் விடாமுயற்சியை மென்மேலும் வளர்த்துப் பிஞ்சு உள்ளம் கொண்டு நினைத்ததைச் செய்ய விரும்பும் சிறார்களின் தன்னிலை பற்றி உடல், உள ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி மனமாற்றத்தினூடாக நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்கப்படும் அருளகத் தாயின் நிர்வாகத்தினரின் புகழ் உலகெங்கும் பரவ சங்கே முழங்கு என்று வாழ்த்தியுள்ளார் ஆசிரியர் மா.கோகுலதீபன் அவர்கள். (2011:06)

பெண் பிள்ளைகளுக்கான புதிய இல்லம் 21.07.2007 அன்று மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 2011 இல் 160 பிள்ளைகள் பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் மாணவர்கள் இங்குள்ளனர். அருளகத்து இல்லப் பிள்ளைகள்,

வவுனியா இந்துக் கல்லூரி

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி

வவுனியா தழிம் மத்திய மகாவித்தியாலயம்.

இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்.

ஆகிய பாடசாலைகளிலும் கற்கின்றனர்.  02.05.2009 அன்று தற்காலிக இடத்தில் சமணங்குளம் என்ற பகுதியில் முதியோரில்லம் ஒன்று காலத்தின் தேவை கருதி அமைக்கப்பட்டது. 2011 இல் அங்கு 195 முதியோர் உள்ளனர். இத்தகவல்களை அகவை பத்தில் அருளகம் (2011:15) செல்வன் சி. நாகதீசன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

பெண்கள் இல்லத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் :-

முன்னைநாள் அருளக மாணவி  லோ. சுகந்தினி பெண் பிள்ளைகளையும் அருளகம் இல்லத்தில் இணைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக வவுனியாக கோவில்குளத்தில் திருமதி.வல்லிபுரம் குடும்பத்தினரின் வீட்டைத் தற்காலிகமாக எடுத்து 10 பெண் பிள்ளைகளுடன் ‘அகிலாண்டேஸ்வரி அருளகம்’என்னும் பெயருடன் பெண்கள் இல்லம் இனிதே ஆரம்பமானது. இப் பெண் பிள்ளைகளுக்கும் பாதுகாவலராக திருமதி. நடராசா தங்கேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டார்.

அருளகமானது கோவில் நிதியிலும் புலம்பெயர்ந்த மேற்குலகில் வாழும் மக்களின் நிதியிலும் இயங்கிவருகிறது. முதல்10 பெண் பிள்ளைகளுடன் ஆரம்பமான பெண்கள் இல்லம் 25, 40 என்னும் தொகைகளில் அதிகரித்தது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் வவுனியா வைத்தியசாலையினூடாக ஒரு மாத இரண்டு குழந்தைகள் 2003ஆம் ஆண்டு முதல் முறையாக இப் பெண்கள் இல்லத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கும் முறையே அபிராமி, தட்சாயினி என்று இவ்வாலய நிர்வாகிகளே பெயர் சூட்டினர். அவர்களைப் பாதுகாத்து அன்புடனும் பண்புடனும் வளர்க்க வளர்ப்புத் தாய் நியமிக்கப்பட்டார்.

அருளகம் பெண்கள் இல்லத்திற்கான அடிக்கல்லை வவுனியா முன்னாள் அரசாங்க அதிபர் தி.க. கணேஸ் 2004 இல் நாட்டினார். கோயிலினதும் தனியாரதும் நிதி உதவியுடன் மூன்று வருட காலத்தினுள் மிகவும் அழகாகவும் பாதுகாப்பாகவும் பெண்களுக்குப் பொருத்தமானதாகவும் பாரிய செலவில் 2007 இல் கட்டிமுடிக்கப்பட்டது. இவ்வில்லத்தை 26.07.2007 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி திரு.மா. இளஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்தார்.

பெண்களுக்கான புது இல்லத்தில் பெண்களுக்குச் சௌகரியமான வசதிகள் காணப்பட்டன. படுக்கை அறைகள் தனியாகவும் நித்திரை செய்வதற்கு கட்டில் வசதிகளும் சாப்பாட்டறை தனியாகவும், பிரார்த்தனை மண்டபம், சிறு பிள்ளைகள், பெரிய பிள்ளைகள் எனத் தனியாகப் பிரித்து ஒழுங்கு செய்யப்பட்டு வழிநடத்தினார்கள்.

இங்கு வளர்ந்து வரும் பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்ததும் திருமண நிகழ்வுகளையும் நிறைவேற்றி வருகின்றார்கள். எமது டிஇல்லத்தில் வளர்ந்து வந்த செல்வி. நடராஜா. வதனி என்பவருக்கு ஆலயத்தினூடாக மிகவும் சிறப்பான முறையில் மாவட்ட நீதிபதி திரு. மா.இளஞ்செழியன் அவர்களின் தலைமையில் திருமண நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் வருடம் வரை அருளகத்தில் வளர்ந்து வரும் பெண் பிள்ளைகள் ஆலயத்தின் உட்புற வீதியில் சாணம் கொண்டு மெழுகி வந்தார்கள். இப் பாக்கியம் அனேக பெண் பிள்ளைகளுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும்.

2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள் ஏராளம் என்றால் மிகையில்லை. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இப் பெண்கள் இல்லத்தில் சிறுவர் நன்னடத்தை உயர் அதிகாரிகள் ஊடாக அனுமதிக்கப்பட்டார்கள்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த சிறுவர் இல்லங்களில் ஒன்றான ‘செஞ்சோலை’ எனும் சிறுவர் இல்லப் பெண் பிள்ளைகள் அனைவரும் மொத்தம் 130 பிள்ளைகளையும் அருளக இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆலய அறங்காவலர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார்கள்.

2011இல் எமது பெண்கள் இல்லத்தில் பலவேறுபட்ட இடத்திலிருந்தும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் ஆதரவற்றவர்களும் தவிர்க்க முடியாத காரணங்களாலும் சிறியவர்கள், பெரியவர்கள் என்று 120 பேர் பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பாதுகாவலராக செல்வி.சு.இராசமலர், செல்வி. அ. அனற்சிந்துஜா (ஆசிரியர்) என்பவர்கள் பெண்கள் இல்லத்திற்குப் பொறுப்பாகவும் இருந்து பெண்களுக்கு ஊதியம் இன்றி சேவை செய்கின்றனர். ஏனைய பணியாளர்கள் ஏழு பேரும் பல்வேறு பணிகளில் நிர்ணயித்து ஒரு சீரான முறையில் நடத்துகிறார்கள்.

பெண்களுக்கான கணினி அறிவு முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது. பெண்பிள்ளைகளுக்கான கணினி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஒரு தனி அறையும் நிர்மாணிக்கப்பட்டு அனைத்து மாணவிகளும் கணினி அறிவைப் பெற்று வருகின்றனர்.

அருளக மாணவர்கள் கலைத்துறை தேர்ச்சிகளுடன் வளர்க்ப்படுகின்றார்கள். வவுனியா நிருத்தியநிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபரான திருமதி. வீரசிங்கம் சூரியாழினி ஆசிரியையிடமும், அவரின் மாணவியான செல்வி. திவ்யா ஆசிரியையிடமும் கற்று வருகிறார்கள். சங்கீதமும் பயின்று வருகின்றார்கள். ஆங்கிலம் சர்வதேச மொழியென்பதால் அதையும் எமது பெண் பிள்ளைகள் பயில வேண்டும் என்ற நோக்கம் கொண்டு மேலதிக வகுப்புக்களில் பயின்று வருகின்றார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புகளும் சனிக்கிழமைகளில் மாணவர் மன்றமும், திரைப்படம் என ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கின்றது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த பல்வேறு கல்விச் சுற்றுலாக்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்கள். கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், மலைநாடு எனப் பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார்கள். 17.08.2010 அன்று யாழ்ப்பாண சுற்றுலாவிற்கு எல்லோரையும் அழைத்தச் சென்று வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயங்களின் கடற்கரைகளையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

 

50,961 total views, 45 views today